Thursday, August 18, 2016

நித்யமல்லி

குயில் போடும் கூச்சலில் துயில் களைந்து
உள்ளங்கை வெப்பத்தில் கண்திறந்து
கன்னம் வருடியும் புறம் புரளும் சிணுங்கல்.
ரசித்து, முகநூல் காணாத வாசல் கோலமிட்டு
உள்வந்தால், விரல் பட்டு கைமாறும் கோப்பையில்
உள்ளம் விழிக்கும் ஓர் காலை வணக்கம்!
என விந்தையாய் ஒரு வாழ்க்கை செய்வோம்!

அடிபம்பில் குளியல், ஆழ்மனதில் வேண்டுதல்
உடல்வியர்க்க, உச்சி காய, நாவறள வேலை! முடிய
களைத்து அமர்ந்து, கதையுடன் காயும் சோறும்!
ஆறுதலாய் துவைத்துளர்த்திய காற்றாடிகள்.
கண்ணயர துணையாய் பழங்கதை பேசும் காகம்,
இவ்வாறு வானொலியுடன் மூன்றாம் ஜாமம்!
என விந்தையாய் ஒரு வாழ்க்கை செய்வோம்

தோட்டத்து மல்லிகையும், முற்றத்தில் ஊற்றிய ஈரமும்
மனதை உரக்க உரைக்க, மலர்ந்து, அகல் ஏற்றும் வேளை,
ஆற்றங்கரை காற்றலை சேர்க்கா மௌனத்திலும் -
நதியோர பிள்ளையார், வீதியோர கூட்டாளிகள். இடையே
கால்மணி குலுங்க, கண்வலை ஈர்க்க
நாம் ஆடும் யாருமறியா கண்ணாமூச்சியிலும் -
அடிவானம் வெட்கப்படும் சாயங்காலம்.
என விந்தையாய் ஒரு வாழ்க்கை செய்வோம்

குமுட்டி அடுப்பும், கோழிமுட்டை பல்பும்
பலகாலம் போன கதை சொல்லி,
பலகாரம் செய்துண்ணும் போதும்
பின் பலவாறு தினம் சொல்லும் ஒரே கதையில்
கைவிசிறிக்காற்றில் ஆடும் வளையோசை லயத்துடன்
இருள் கொண்டு பொருள் தேடி விடியும் நள்ளிரவு
என விந்தையாய் ஒரு வாழ்க்கை செய்வோம்